.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதில் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் உள்ளன. ஏனெனில் டிஜிட்டல் வழியாக இன்று பல மோசடிகள் நடக்கின்றன. இதனால் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இருப்பினும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி என பலர் வழிமுறைகளைக் கூறினாலும், யாரும் இதற்கு நிரந்தரத் தீர்வை அளிக்கவில்லை. ஆனால் சென்னையைச் சேர்ந்த ஒடிசி டெக்னாலஜிஸ் (Odyssey Technologies Ltd) என்ற நிறுவனம் சைபர் மோசடிகளைத் தடுக்க இரண்டு புதிய தயாரிப்புகளை வடிவமைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இப்போது பார்ப்போம்.
அதிவேக இணைய சேவையால், மொபைல் போன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இன்று மொபைல் இல்லாதவர்களைப் பார்ப்பது கூட அரிது தான். அந்த அளவிற்கு மொபைல் போன்கள் நம்மை ஆக்கிரமித்து விட்டன. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி பாராட்டத்தக்கது தான் என்றாலும், இதனால் சில தீமைகளும் அரங்கேறுகின்றன. அதில் முக்கியமானது தான் சைபர் மோசடிகள்.
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலமடைந்து விட்டது. யாரென்றே தெரியாத ஒருவர், மொபைல் மூலம் தொடர்பு கொண்டு உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்; உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சொல்ல வேண்டும் என்றவுடன் பலரும் பயந்து போய் சொல்லி விடுகின்றனர். ஆனால் இவர்கள் ஏமாற்றப்பட்டது பின்னர் தான் அவர்களுக்கே தெரிய வருகிறது. இதுபோன்ற மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
வங்கிக் கணக்கு முதல் ஆதார் கார்டு வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி இருப்பது, மோசடி செய்பவர்களுக்கு வசதியாக உள்ளது. இருப்பினும் நமது பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்ய வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இன்றைய டிஜிட்டல் உலகில் நம்மால் தப்பிப் பிழைக்க முடியும். இந்நிலையில் பொதுமக்கள் யாரும் சைபர் மோசடிகளில் சிக்கி விடக் கூடாது என ஒடிசி டெக்னாலஜிஸ் நிறுவனம் ஸார்கீசைன் மெயில் (XorKeeSign Mail) மற்றும் ஸார்கீசைன் ஸ்பாட் (XorKeeSign Spot) என்ற இரண்டு புதிய தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது.
‘ஸார்கீசைன் மெயில்’ ஒரு பிரவுசர் போன்று செயல்படும். மின்னஞ்சல் பயனாளர்களை குறி வைக்கும் மோசடிக்காரர்களிடம் இருந்து இந்த வசதி பாதுகாக்கும். பிஷிங் மெயில்கள் மூலம் பயனாளர்களை ஹேக் செய்வதும் இதில் தடுக்கப்படும். கிட்டத்தட்ட 20 கோடி மின்னஞ்சல் பயனாளிகள் இதன்மூலம் பயனடைவார்கள்.
‘ஸார்கீசைன் ஸ்பாட்’ என்பது ஒரு மொபைல் செயலி. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மோசடி செய்பவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளாதவாறு இந்தச் செயலி பாதுகாக்கும். இதன்மூலம் 100 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் பயனாளிகள் பயனடைவார்கள்.
ஒருவர் மற்றொருவருக்கு ஒரு செய்தியை அனுப்பும் போது டிஜிட்டல் முறையில் கையொப்பம் இட முடியும். அதோடு பெறுநர் அந்த கையொப்பத்தை சரி பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. உலகிலேயே இந்த வசதியை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் ஒடிசி டெக்னாலஜிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், ஒடிசி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.