சீனாவில் அடுத்த கொரோனா அலை ஆரம்பித்துவிட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பற்றிய கவலைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஏர் லங்கா விமானம் மூலம் மதுரைக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
நேற்று அதிகாலை மதுரை விமானநிலையத்தில் வந்த இறங்கிய ஏர் லங்கா பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த இரு பெண்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் சீனாவிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர்கள். இருவரது தொற்று மாதிரிகளும் மதுரையிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பிஎப் 7 வகை கொரோனாவா என்று கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் ஆரம்பித்துள்ளன. இரண்டு நாட்களில் முடிவுகள் தெரிய வரும்.
பாதிக்கப்பட்ட இருவரையும் 15 நாட்கள் தனிமையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏர் லங்கா விமானத்தில் உடன் பயணித்த 70 பயணிகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வீட்டில் இறக்கிவிட்டு சென்னைக்கு கிளம்பிய டிரைவரை தொடர்பு கொண்டு அவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
சீனா, தென்கொரியா, ஜப்பான் தைவான் ஆகிய தெற்காசிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையும் தனிமைப்படுத்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவர்கள் 50 பேர் மட்டுமே. இவர்களில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை இல்லை.
புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசின் சுகாதாரத்துறை மாநிலங்களை கேட்டுக்கொண்டிருக்கிறது. சென்றவாரம் அதற்கான ஒத்திகையும் நடந்தது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் கையிருப்பு, மருந்துகள், கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மூன்று முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்பதால் வழக்கமான தனிமைப்படுத்தல், மாஸ்க் அணிவது போன்ற விஷயங்களை தொடர வேண்டியிருக்கிறது. வேறு வழி?