தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டம் முடிவடைந்து சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு வெளியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆவினில் கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் நிறுவனம் சார்பில் ஏற்கனவே பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஆவினில் கேக் அறிமுகம் செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து தற்போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், ஆவினில் பணிபுரியும் 27,189 பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர மேலும் ஆவினில் புதிதாக குளிர்பானங்கள் மற்றும் கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் பல்வேறு புதிய வகைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இனி பொது மக்கள் ஆவினில் விதவிதமான ஐஸ்க்ரீம்களை வாங்கி ருசிக்கலாம்!