

சென்னை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக 'கால் பார்வர்டிங்' என்ற நூதன மோசடி நடைபெற்று வருகிறது. டெலிவரி ஏஜென்ட்கள் என்ற போர்வையில் பணத்தினை குறிவைத்து இந்த மோசடி நடைபெற்று வருகிறது . கால் ஃபார்வார்டிங் மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடியில் இருந்து கவனமாக இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதை பார்ப்போம்.
மோசடி நடக்கும் விதம் :
பொதுவாக இந்த மோசடியை அரங்கேற்றுபவர்கள் தங்களை அமேசான், பிளிப்கார்ட் , ப்ளூ டார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரை சொல்லி , அந்த நிறுவனத்தின் டெலிவரி ஏஜென்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு போன் செய்வார்கள். அந்த அழைப்பில் "உங்களது பார்சல் வரும்போது டேமேஜ் ஆக வந்துவிட்டது , உங்களது முகவரி சரியாக இல்லை , உங்களுக்கு வந்த பார்சலை இப்போது டெலிவரி செய்ய முடியவில்லை , அந்த பார்சலை கேன்சல் செய்ய இந்த எண்ணை அழுத்தங்கள் , அல்லது எங்களது மேல் அதிகாரியிடம் பேசுவதற்கு இந்த எண்ணை நீங்கள் டயல் செய்யவும்" , என்று குறிப்பிட்டு USSD எண்ணை டயல் செய்ய சொல்வார்கள்.
உதாரணமாக *123# அல்லது *111# போன்ற எண்ணை உங்கள் மொபைலில் டயல் செய்ய சொல்வார்கள். நீங்கள் அந்த எண்ணை டயல் செய்த அடுத்த நொடியே, உங்கள் மொபைலுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் ரகசியமாக மோசடிக்காரர்களின் எண்ணுக்குத் திருப்பப்படும். இந்த கால்கள் மூலம் உங்களது பண வரவுகளை கண்காணித்து, ஒரு நாள் வங்கியில் இருந்து போன் செய்வது போல பேசி உங்களிடம் OTP கேட்பார்கள். நீங்கள் OTP குடுத்தால் உங்கள் அக்கவுண்டில் உள்ள மொத்த பணமும் அவர்களுக்கு போய்விடும்.
இந்த மோசடி பெரும்பாலும் பொதுமக்களின் அவசரத்தையும், பார்சல் டெலிவரி குறித்த எதிர்பார்ப்பையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறுகிறது. இதுதான் 'கால் பார்வார்டிங்'. மோசடிகள். மேலும் அவர்கள் உங்களது வாட்ஸ் அப் கணக்கையும் ஹேக் செய்வார்கள். இதன் மூலம் உங்களை மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் செய்யலாம்.
சைபர் கிரைம் எச்சரிக்கை:
பொதுமக்கள் எப்போதும் விழிப்புடனும் பாதுகாப்புடன் இருக்குமாறு சைபர் கிரைம் அறிவுறுத்துகிறது. போன் மூலம் தெரியாத நபர்கள் யாரேனும் OTP கேட்டால் கொடுக்க வேண்டாம். டெலிவரி ஏஜென்ட்கள் போல் யாரேனும் போன் செய்து உங்களது ஃபோனில் USSD எண்களை டயல் செய்ய சொன்னால் கட்டாயம் செய்யாதீர்கள்.
கால் பார்வார்டிங் தடுப்பது எப்படி?
உங்கள் போனில் கால் ஃபார்வார்டிங் செயலில் உள்ளதா என்பதை அறிய *#21# அல்லது *#62# ஆகிய எண்களை டயல் செய்து சரிபார்க்கவும் . உங்களுக்கே தெரியாமல் போன் கால் பார்வர்டிங் ஆகி இருந்தால் , அதை ரத்து செய்ய ##002# இந்த எண்ணை அழுத்தவும். இது அனைத்து விதமான கால் பார்வார்டிங் சேவைகளையும் உடனடியாக நிறுத்திவிடும். ஏதேனும் ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டிக் கொண்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே புகார் அளிக்கவும்.