
தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நலப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இளைஞர்களின் கல்வி, அறிவு, சிந்தனை, ஆற்றல் மற்றும் திறமைகளை மேம்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, போட்டித்தேர்வு பயிற்சி, உயர்கல்விக்கு வழிகாட்டுதல், வெளிநாட்டு மொழி கற்பித்தல், மாணவர் மேம்பாட்டு பயிற்சி, அறிவியல் களப்பயணம், வெற்றி நிச்சயம் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வுக்கு சிறப்பு பயிற்சி இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு, அதில் பலர் பயன் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, வேலைக்காக ஆட்களை தேர்வு செய்பவர்கள், வேலைத் தேடும் திறமையாளர்களை இணைக்கும் வகையில் இந்த இணையதளம் முக்கிய பங்காற்ற இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, படித்து முடித்த திறமையான இளைஞர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நேரில் அணுகக்கூடிய வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் படித்து முடிக்கக் கூடிய மாணவர்கள், இளைஞர்களின் முழு சுய விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட இருக்கின்றன.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமை வாய்ந்த பணியாளர்களை நேரில் அணுகி ஆட்தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த இணையதளத்தை விரைவில் தமிழக அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது நிச்சயம் சிறப்பான முன்னெடுப்பாக இருக்கும் என கல்வியாளர்களும், நிறுவனங்களை சார்ந்த உயர் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.