மன அழுத்தத்தின் காரணமாக திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட பெண் எம்.பி.! எங்கு தெரியுமா?

MP Golriz Ghahraman
MP Golriz Ghahraman

நியூஸிலாந்து நாட்டில் அதிரடி திருப்பமாக ஆச்சரியமளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஆம் அந்த நாட்டின் பெண் எம்.பி.யான கோல்ரிஸ் கஹ்ராமன் மீது திருட்டு குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு அகதியாக வந்து அரசாங்கத்தில் பணிபுரியும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையை 26 வயதான கோல்ரிஸ் பெற்றார். ஆனால், இப்போது ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் உள்ள இரு துணிக்கடைகளில் பொருட்களை திருடியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவர் எம்.பி. பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார். மூன்று வெவ்வேறு சம்பவங்களில் அவர், கடைகளில் திருடியதாக புகார் எழுந்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள அழகுசாதன பொருள்கள் விற்பனைக் கடையில் கண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கைப்பையை அவர் திருடிச் சென்றது சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

MP Golriz Ghahraman
MP Golriz Ghahraman

பெண் எம்.பி.யான கோல்ரிஸ் கஹ்ராமன், இதற்கு முன் ஐ.நா. மனித உரிமைகள்  வழக்குரைஞராக பணியாற்றியவர். பணி நிமித்தமான மன அழுத்தமே தமது செயலுக்கு காரணம் என்று அவர் கூறினார். மன அழுத்தமே என்னை அப்படி நடந்துகொள்ளச் செய்தது. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமது நடத்தை மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான் என்று தெரிவித்த அவர், தமக்கு மன உளைச்சல் இருந்ததாகவும் மருத்துவ ரீதியில் அதற்கு நிவாரணம் தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்ற போதிலும் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிக்கான தரத்திலிருந்து கீழே சரிந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

MP Golriz Ghahraman
MP Golriz Ghahraman/i.guim.co.uk

கஹ்ராமனின் ராஜிநாமா, அவரது அரசியல் வாழ்வில் பாலியல் வன்முறை, உடல் ரீதியான வன்முறை மற்றும் அச்சுறுத்தல் தொடர்பாக அவர் எதிர்கொண்ட சவால்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. பசுமை கட்சியின் இணை தலைவரான ஜேம்ஸ் ஷா, இந்த அச்சுறுத்தல்கள் அவரின் மனநலத்தை வெகுவாக பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் பிறந்தவரான  பெண் எம்.பி. சிறுவயதிலேயே நியூஸிலாந்தில் தஞ்சம் புகுந்தார். மரபு, பாலினம் மற்றும் பொது நிலைப்பாடுகள் தொடர்பாக நேரில் மற்றும் ஆன்லைன் மூலம் பல துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார். தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ள அவர், தனக்காக பாதுகாவலர்கள் மட்டுமல்ல பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளையும்  மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கஹ்ராமனின் ராஜிநாமா சரியான நடவடிக்கைதான் என்று ஒப்புக்கொண்டுள்ள பசுமைக் கட்சியின் மற்றொரு தலைவர் மராமா டேவிட்சன், அவரது மனநலம் குறித்து கவலை வெளியிட்டார். பொதுமக்கள் பார்வையில் பெண்கள், குறிப்பாக வெள்ளை நிறம் கொண்டவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட டேவிட்சன், இந்த கடினமான நேரத்தில் கஹ்ராமனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com