எலி இனத்தை அழிக்க முயற்சிக்கும் நியூசிலாந்து.. காரணம் என்ன?

Rat
Rat
Published on

2050 -ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது நியூசிலாந்தின் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் ஒற்றை எலியை அடிக்க வடிவேலு படாத பாடு படும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம்…

இப்படி, ஒரு எலியை பிடிப்பதே பலருக்கும் பெரும் காரியமாக இருக்கும் சூழலில், தன் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறது நியூசிலாந்து. மனிதர்கள் குடியேறிய கடைசி பெரிய நிலப்பரப்பு என்று அறியப்படும் நியூசிலாந்தில், மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கிருந்த உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில், அங்கே எஞ்சியுள்ள மற்ற அரிய உயிரினங்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அங்குள்ள பூர்வீக பறவை இனங்களை காப்பதற்காக எலிகள் போன்ற வேட்டை விலங்குகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் களமிறங்கியிருக்கிறது அந்நாட்டு அரசு. 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கண்டத்தில் இருந்து பிரிந்த நியூசிலாந்து நிலப்பரப்பில் முன்பு பாலூட்டி விலங்குகள் தோன்றியிருக்கவில்லை. அதனால் அங்குள்ள பறவைகள் நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தன.

இந்நிலையில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்ட பாலூட்டிகள் அங்குள்ள பறவைகளை உணவாக உட்கொள்ள ஆரம்பித்தன. அந்த வகையில் கிவி போன்ற பறவைகளின் முட்டைகளை வேட்டையாடும் எலிகளை 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து அரசு. அதற்காக, ஏராளமான பணம், அறிவியல் தொழில்நுட்ப முறைகள், மனித வளம் ஆகியவற்றை பயன்படுத்தி இதனை சாத்தியப்படுத்த முயற்சித்து வருகிறது. உலகில் ஏற்கனவே எலிகளை முற்றாக ஒழித்த நிலப்பரப்பு என்றால் அது தெற்கு அட்லாண்டிக் கடலில் 170 கிமீ நீளமுள்ள தெற்கு ஜார்ஜியா தீவு மட்டுமே. அதுபோல நியூசிலாந்து நாட்டிலும் இது சாத்தியமே என்ற நம்பிக்கையில் எலிகளை அழிக்கும் நடவடிக்கையை நியூசிலாந்து மேற்கொண்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com