தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆற்றங்கரையோரம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து, வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வர். புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபடுவர். இந்த நிலையில், மேட்டூர் அணை மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு மக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 இடங்களில் 5-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மத்திய மண்டலத்தைச் சேர்ந்த காவலர்களுக்கான 'மகிழ்ச்சி' திட்டத்தை திருவாரூரில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தொடக்கி வைத்தார். தற்கொலை செய்துக் கொள்பவர்களில் காவலர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி அளிப்பதற்காக 'மகிழ்ச்சி' என்றத் திட்டம் தொடங்கப்பட்டதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில், டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் கட்டப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட ரயில்கள் இதில் இயக்கப்படவுள்ளன.
இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 47.5 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. போட்டி இறுதியில், இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால், போட்டி டையில் முடிந்தது.