.jpg?w=320&auto=format%2Ccompress&fit=max)
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடே, 2015 முதல் கனடாவின் 23வது பிரதமராக இருந்து வருகிறார். இவர் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த வேண்டி, நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைப்பான ராணுவ தளபதியாக, ஜென்னி கேரிங்கனர் என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளார். ஜென்னி கேரிங்கனர் ராணுவத்தில் பல்வேறு பதவிகளை பொறுப்பேற்று வந்த நிலையில், தற்போது தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 18-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் ராணுவ தளபதி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆம்ஸ்டிராங்கின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆம்ஸ்டிராங்கை வெட்டிவிட்டு தப்பிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கியுள்ள 'டீன்ஸ்' படம் வருகிற ஜூலை 12 - ஆம் தேதி வெளியிடுவதாக இருந்த நிலையில், பார்த்திபன் 'டீன்ஸ்' படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவப்பிரசாத் என்பவர் மீது கோவை காவல் நிலையத்தில், படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர் முடித்து தரவில்லை என புகார் அளித்திருக்கிறார். இதற்கு சிவபிரசாத் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பையை வென்ற சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வில் இருப்பதால், இளம் வீரர்கள் களமிறங்குகின்றனர்.