ஆன்லைன் தேடலில், கூகுள் நிறுவனம் 90 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2020-ல் அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு ஓராண்டுக்கும் மேலாக, நிலுவையில் இருந்தது. தற்போது அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா இதற்கு தீர்ப்பு அளித்தத்தில், "கூகுள் நிறுவனம், தேடல் சேவையில் ப்ரவுசரில் 90 சதவீதத்தையும், மொபைல்களில் 94.9 சதவீதத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது" என தீர்ப்பளித்த நிலையில், கூகுள் இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. இதில் அடையாளம் காணப்படாத உடல்கள், உடல் பாகங்கள் புத்துமலை பகுதியில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருந்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஆக.11-ம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆந்திரா, கேரளா போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது தமிழகத்திலேயே தேர்வு மையங்களை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோர், விமானத்தில் செல்வதாக இருந்தால் கொழும்பு தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தாலும், கொழும்பு சென்று தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை சரி செய்ய, சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் காலிறுதி சுற்றில் இறுதி நேரத்தில் கையில் ஏற்பட்ட வலியால், வட கொரியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார் இந்திய வீராங்கனை நிஷா. 8 - 2 என்கிற நிலையில், நிஷா முன்னிலையில் இருந்ததார். கடைசி 33 நொடிகள் மீதம் இருக்கும் சமயத்தில் திடீரென அவருக்கு கை வலி ஏற்பட்டுள்ளது. வலியுடன் விளையாடிய நிலையில் மேற்கொண்டு புள்ளிகள் பெறாத சூழலில் வட கொரியா வீராங்கனை 10 - 8 என்கிற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.