இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் 5ஜி தொழில்நுட்ப ஃபோன்கள் 79% இடம் வகித்துள்ளதாக சைபர் மீடியா ரிசர்ச் நிறுவன புள்ளி விவரம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் 'விவோ' முதலிடமும் 'சாம்சங்' இரண்டாவது இடமும் வகிப்பதாக கூறியுள்ளது.
கூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது இணைய தேடுதலின்போது கூகுளில் வரும் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் கூகுள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6 வது நினைவு நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச் சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் கருணாநிதியின் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடந்து வருகிறது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பாதிப்புகளை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு பாதிப்பு உள்ள பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் கிடையாது என கேரள அரசு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் மல்யுத்த தனி நபர் போட்டியில் கியூபாவை சேர்ந்த மல்யுத்த வீரர் மிஜெயின் தங்க பதக்கம் வென்றார். இவர் தொடர்ந்து 5 முறை தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.