ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவில் முதல் அரிசி ஏ.டி.எம் மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்துள்ளார். அதன்பின் கிருஷ்ண சந்திர பத்ரா ''பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏ.டி.எம் யை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 131 பேரை தேடும் பணி இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினருடன் இணைந்து உறவினர்களும் தொலைந்த உறவுகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பிரதமர் மோடி நாளை கேரளா செல்ல உள்ளார். இதற்காக கல்பட்டா, மேற்பாடு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் பிரதமர் செல்லும் சாலையில் சோதனை முறையில் வாகனங்களை இயக்கி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தேவர் ஐயாவை இழிவு படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1001 வழங்கப்படும்’’ என்று பதிவிட்டிருந்தார். இப்பதிவு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், அர்ஜுன் சம்பத் அவதூறாக பேசியதை குற்றம்சாட்டி ரூ.4000 அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கினார். அர்ஜுன் சம்பத் தான் அவதூறாக பேசிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி நான்கு ஐந்து மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.