அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாக உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அறிவித்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில், தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாகப் பதிவு செய்துள்ளார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் மொத்தமாக 7,016 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது" என அறிவித்துள்ளார்.
பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் 'அபோபிஸ்' எனும் சிறு கோள். 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த அளவுக்கு வேறு எந்த சிறு கோளும் பூமியை நோக்கி நகர்ந்தது இல்லை என்றும் 'அபோபிஸ்' பூமியை தாக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ‘96.’ தற்போது இப்படத்தின் 2வது பாகம் குறித்து இயக்குநர் பிரேம்குமார், ‛‛96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி விட்டேன். இந்தக் கதையை நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியிடம் சொன்னபோது அவர் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினார். அதனால் அடுத்தபடியாக ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவே நடிப்பார்கள்'' என புதிய அப்டேட் கொடுத்து ரசிகர்களை ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நொய்டா மைதானத்தில் நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக 3வது நாளும் ரத்து செய்யப்பட்டது. முதல் 2 நாள் ஆட்டமும் மழை காரணமாக ரத்தான நிலையில், 3வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.