ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 901 நாட்களை எட்டியது. கடந்த 6ஆம் தேதி, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் நுழைந்த உக்ரைன் ராணுவத்தினர், ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், தங்களது குர்ஸ்க் பிராந்தியத்தில் முன்னேறிய உக்ரைன் படைகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஷ்யா தகவல் அளித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் வகையில், முதன்முறையாக, ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிப்பாட புத்தகத்தின் விலை உயர்வுக்கு அதிக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காகிதம், மேல் அட்டை விலை மற்றும் அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான நேரத்தில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் இப்போது அப்படத்தை கொண்டாடி இருக்க வேண்டும் என வருத்தப்படுகின்றனர். தங்கலான் படத்தில் பழங்குடியினர் வாழ்க்கையை இசையால் சொல்ல முயற்சி செய்துள்ளேன். ஆயிரத்தில் ஒருவன் போன்று இல்லாமல் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 1ம் தேதி முதல் பயிற்சியாளராக செயல்படுவார் என கூறப்படுகிறது.