புகழ் பெற்ற ‘டைம்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட டாப் நிறுவனங்களின் பட்டியலில், அதானி குழுமம் இடம்பெற்றுள்ளது. 1000 நிறுவனங்களைக் கொண்ட இந்த பட்டியலில், இந்தியாவிலிருந்து மொத்தம் 22 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் அதானி குழுமம் 736வது இடத்திலும், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 646வது இடத்திலும் உள்ளன. டாப் 100ல் எந்தவொரு இந்திய நிறுவனமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை கூடுதல் அலுவலர், உதவி பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி, குரூப் 2 முதல் நிலை எழுத்துத்தேர்வு இன்று நடந்து முடிந்தது. இந்தத் தேர்வு 2,763 மையங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், புதிதாக பதவியேற்ற, டி.என்.பி.எஸ்.சி, தலைவர் எஸ்.கே.பிரபாகர், இன்று தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து, "நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தற்போது டி.என்.பி.எஸ்.சி, தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றன. முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
வெப்பமான சூழலில் மக்கள் சிக்கித் திணறுவதைப் பார்த்து, “இன்னும் சில நாட்கள்தான். வெப்பமான நாட்களை பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களை Chill செய்ய மழை செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பெய்ய உள்ளது!" என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்து இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெற்றி தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடி இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, விஜய்யின் 69வது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் நடிகர் விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மோகி நகரில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.
ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.