78-ஆவது சுதந்திர தினமான இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி,
"40 கோடி இந்தியர்களால் சுதந்திரம் சாத்தியமானது என்றால், 140 கோடி பேரால் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவது சாத்தியம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தற்போது நடப்பது இந்தியாவின் பொற்காலம். இந்த காலகட்டத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துறையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சியடைய முழு ஆதரவு வழங்கப்படும்.
2036-இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. ஒலிம்பிக்கை நடத்த வேண்டும் என்ற தேசத்தின் கனவு நனவாக்கப்படும்.
ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரப் பறக்கச் செய்த இளைஞர்களுக்கு தேசத்தின் சார்பில் நன்றி.
பாரீசில் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய குழுவினருக்கு வாழ்த்துகள்" என பேசியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, இஸ்ரோவின் சந்திராயன் -3 விண்கல திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேலுக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதும், கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருதும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
2023 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். ஆனால் இப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பூ ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
78-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ராமேஸ்வரம் கடலில் 40 அடி ஆழத்தில் மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டது. ஆழ்கடல் பயிற்சியாளர்கள் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கடியில் சென்று மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர்.
ஆக்ஸ்ட் 15 - இன்று உலகம் முழுவதும் 'தங்கலான்' படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து , மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பழங்குடியினரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு படமும் சொல்லாத இவர்களின் கதையை படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.