வட அமெரிக்க நாடான கனடாவில் கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் கனடாவுக்கு செல்கின்றனர். இந்நிலையில், சமூகவலைதளத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதியை கனடா அரசு இந்தாண்டு 35 சதவீதம் குறைக்கிறது. 2025ம் ஆண்டு மேலும் 10 சதவீதம் குறையும். குடியேற்ற முறையை தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு அனுமதி வழங்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி 50 சதவீதம் குறைத்ததால், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் அடைந்துள்ளன. சென்செக்ஸ் 83 ஆயிரத்து 631 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை 25,592 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
ஆந்திராவில் இடைவிடாத மழையால், குளங்கள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவதால் மாநிலத்தின் பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் ஆந்திராவுக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அதானி குழுமம், இன்று 25 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான தனுஷ், இன்று மாலை 5 மணிக்கு தான் இயக்கும் 4வது படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்திருந்தார். அந்த வகையில், படத்தின் பெயர் 'இட்லி கடை' என இருக்கும் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்களுக்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக, இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி தலா 6 ரன்களும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில், இந்திய அணியின் வீரர் ரவி அஷ்வின் 108 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.