மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கத்தால் உலகளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் 2-வது நாளாக சர்வர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையங்களில் பயணச்சீட்டு பதிவு தாமதமானதால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து புறப்படும் 16 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு, 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பல மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும், போட்டியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கோவிட் தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர், அடுத்த வாரம் முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு பிரசாரத்தின்போது, டிரம்ப்பின் திட்டங்களை அம்பலப்படுத்தி தனது அரசின் சாதனைகளையும், அமெரிக்கா குறித்த பார்வையையும் எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக முதுமலை யானைகள் மற்றும் புலிகள் காப்பகம் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழையால் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, மரங்கள் விழுவது, சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுவது போன்ற பிரச்சனைகள் இருப்பதால் திங்கட்கிழமை வரை முகாம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா, ஆந்திரா கடலோரத்தில் இருந்து வட மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் ஒடிசா பாரதீப், கோபால்பூர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கிலும், ஆந்திரா கலிங்கப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிழக்கு, வட கிழக்கிலும் மையம் கொண்டு உள்ளது. இதனால் தமிழக கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசி ராட்சத அலைகள் எழக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் தம்புலாவில் பெண்களுக்கான டி20 ஆசிய கோப்பை 9-வது சீசன் நேற்று துவங்கியது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதலில் மோதின. போட்டி முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று, போட்டியின் தொடக்கத்தை வெற்றியோடு ஆரம்பித்துள்ளது.