பூமியை ஏற்கெனவே நிலா சுற்றி வரும் நிலையில், மேலும் ஒரு சிறிய நிலவு தற்காலிகமாக சுற்றி வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘மினி மூன்’ என்று விஞ்ஞானிகள் செல்லப்பெயர் சூட்டியுள்ள 10 மீட்டர் அகலம் கொண்ட இந்த சிறிய வகை விண்கல் 2024 பி.டி.ஃபைவ் என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.
செப்டம்பர் 29ம் தேதி பூமியை நெருங்கி 56.6 நாட்கள் சுற்றி வரும் பி.டி.ஃபைவ், அதன் பின் நவம்பர் 25ம் தேதி புவியீர்ப்பு பிடியில் இருந்து விலகி சூரியனைச் சுற்றச் சென்றுவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மிகச் சிறியதாக இருப்பதால் மினி மூனை வெறும் கண்ணால் பார்க்க இயலாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். ரிப்பிள் என்ற பெயரில் ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தொழில்நுட்ப நிபுணர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர் உதவித் தொகையை இரு மடங்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். அதற்காக 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருவருக்கு தலா 1 லட்ச ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கு 50 லட்சத்தை ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று ஒரே நாளில் 6 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. லப்பர் பந்து, கடைசி உலகப் போர், நந்தன், தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லதுரை, தோனிமா ஆகிய 6 திரைப்படங்கள் அவை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், பங்கேற்றுள்ள வங்கதேச அணி வீரர் ஹசன் மஹ்முத் ( 24 ) ‘ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர்' என்ற சாதனையைப் படைத்துள்ளார்.