ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புத்திய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது. டிரம்பை கமலா வெற்றி கொள்வார். அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார்” என்று கூறியுள்ளார். நான்கே வாரங்களில் 500 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள கமலா ஹாரிஸ்க்கு அதிகமான ஆதரவு திரண்டு வருகிறது.
மூன்றுநாள் பயணமாக போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு இன்று புறப்படுகிறார் பிரதமர் மோடி. போலந்து அரசுடன் வர்த்தகம், பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பின் போலந்தில் இருந்து 20 மணி நேரம் சொகுசு ரயிலில் பயணித்து உக்ரைன் செல்ல உள்ளார்.
கேரளாவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையான பொருட்கள் அடங்கிய ஓணம் கிட் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதோடு, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால், அரசு சார்பில் திருவோணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
வாழைப் படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று வெளியான நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், "உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai-ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காக காத்திருக்கிறேன்" என வாழைப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்யை பாராட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று போட்டி சமாவோ நாட்டின் தலைநகரான அபியாவில் நடைபெற்றது. இதில் சமாவோ - வனுவாட்டு அணிகள் மோதின. முதலில் பேட்செய்த சமாவோ 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியின் பேட்ஸ்மேனான டேரியஸ் விசர் 62 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி 20-ல் சதம் விளாசிய முதல் சமாவோ வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.