News 5 - (22-07-2024) - இந்தியாவுக்கு உலக விண்வெளி விருது!

News 5
News 5

1. இந்தியாவுக்கு உலக விண்வெளி விருது!

chandrayaan 3
chandrayaan 3

கடந்த வருடம் ஆகஸ்ட் 23ஆம் தேதி, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 திட்டமிட்டபடி நிலவில் தரையிறக்கப்பட்டது. இது உலக நாடுகளுக்கிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி இத்தாலியில் நடக்கவுள்ள 75-வது சர்வதேச விண்வெளி மாநாட்டில் சந்திரயான் 3 திட்டத்திற்காக இந்தியாவுக்கு உலக விண்வெளி விருது வழங்கப்பட உள்ளது.

2. தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தொழில்நுட்பக் கல்வி இயக்கம்!

college students
college students

தமிழ்நாட்டில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்திருந்தது. ஆனால்,  2024-25 கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்கம் ரத்து செய்துள்ளது.

3. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கை!

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், "உலகளாவிய பொருளாதார செயல்திறன் நிச்சயமற்ற நிலையில் இருந்தபோதிலும், வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. 2024-ம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி ஊக்கிகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர் மற்றும் மோதல் போக்குகளின் தாக்கம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் எதிரொலித்தது. நாட்டின் குறுகிய கால பணவீக்கத்தால் பாதிப்பு இல்லை. எனினும், பருப்பு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட விலை உயர்வால் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலைவாசியின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2023-ம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4. நடிகர் தனுஷ் நடிக்கும் ராயன் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!

Rayan movie
Rayan movie

நடிகராக தமிழ் சினிமாவில் பயணித்து வந்த தனுஷ், பா. பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். இப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் 'ராயன்'. வருகிற ஜூலை 26 அன்று திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

5. முகமது ஷமியின் கேள்வியும்! எம்.எஸ்.தோனியின் பதிலும்!

Mohammed Shami with doni
Mohammed Shami with doni

"ஒரு கிரிக்கெட் வீரர் எப்போது ஓய்வு பெற வேண்டும்? என்று தோனியிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர், 'எப்போது ஒரு வீரனுக்கு கிரிக்கெட் மீது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது ஓய்வை அறிவிக்கலாம்' என்றும், 'அணியில் இருந்து நீக்கப்படுவார் என ஒரு வீரர் அறிந்தால், அப்போது அவர் ஓய்வை அறிவிக்கலாம்' என்றும் என்னிடம் தெரிவித்தார்" என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com