அரசு முறை பயணமாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மோடியை, கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றுள்ளார். இன்று மோடியும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, ரஷ்ய தாக்குதல் குறித்தும், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசிப்பார்கள் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 27- வது தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பின் அவர் அளித்த பேட்டியில், "டி.என்.பி.எஸ்.சி. வெளிப்படையாக செயல்படுவதோடு, தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் கூறினார்.
வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தியது மெட்டா நிறுவனம். உங்கள் DP, Last Seen, About Information-ஐ யார் பார்க்க வேண்டும் மற்றும் வாட்ஸ்அப் குரூப்பில் யார் உங்களை இணைக்க வேண்டும் என்பதை இனி நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். இந்த புதிய அப்டேட் தற்போது Beta Version-ல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாவதாக கூறப்படுகிறது.
ஜோர்டானின் அம்மானில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், கிரேக்க - ரோமன் 110 கிலோ பிரிவில், இந்தியாவின் ரவுனக் தஹியா வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவரை நடந்த போட்டிகளில், 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை இந்திய கைப்பற்றியுள்ளது.