40 நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் பங்கேற்ற ஐ.நா. சபை கூட்டத்தில், ஒடிசாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரஞ்சிதா பிரியதர்சிணி, ‘பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில், ஓரிரு தினங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு ஜூன் மாதம் சென்ற சுனிதா வில்லியம்ஸை மீட்டு பூமிக்கு பத்திரமாக அழைத்து வர புதிய திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. Falcon 9 ராக்கெட் மூலமாக வரும் 26ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் 4 இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தின் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
"நாட்டில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடியாக உயர்ந்துள்ளது. செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடியில் இருந்து 117 கோடியாக அதிகரித்துள்ளது" என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில், செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆன படம் 'லப்பர் பந்து.' இந்தப் படத்திற்கு அதிக பாசிட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில், இந்தப் படம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறுகையில், "பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தை நான் அதிகம் ரசித்துள்ளேன்; ஒரு திரைப்படத்தை எந்த அளவுக்கு உண்மைத் தன்மையோடு எடுக்க முடியும் என்பதற்கு 'லப்பர் பந்து' படம் ஒரு பாடம்" எனக் கூறியுள்ளார்.
ஒரு கிளப்பிற்கு அதிவேகமாக 100 கோல்கள் அடித்த கால்பந்து வீரர் என்ற ரொனால்டோவின் சாதனையை சமன் செய்தார் எர்லிங் ஹாலண்ட். எதிஹாட் மைதானத்தில் ஆர்சனலுக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டிக்காக எர்லிங் ஹாலண்ட் தனது 100வது கோலை அடித்தார்.