இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது இந்த ஆண்டு பட்ஜெட்டில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லும் நபருக்குச் செலுத்தப்படாத நிலுவை வரிகள் எதுவும் இல்லை அல்லது நிலுவைத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளார் என்பதை இந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். அக்டோபர் 1 முதல் இதை நடைமுறைப்படுத்துவதாக கூறப்படுகிறது.
உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களிடம் ஆதார் இல்லாவிடில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பொறுப்பேற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல வேண்டாம் என தமிழ்நாடு கல்லூரிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் LIC திரைப்படத்தின் பெயருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படத்தின் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டு, ஜூலை 25-ந் தேதி, பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று LIC என்ற படத்தின் பெயர் மாற்றம் செய்து, LIK என வெளியிட்டுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.