ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு, டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாக கண்காணிக்க தவறியதாகவும் கூறி, அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (39) கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தகவல் அளித்துள்ளது. இவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அந்த விண்கலம் காலியாக திரும்புகிறது என நாசா தெரிவித்துள்ளது.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், 72-வது பிறந்த நாள் விழா, சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த விழாவில், பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் "நமது கட்சி அலுவலகம் இனி, 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும்" என அறிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடலான ‘Golden Sparrow’ விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் போஸ்டரை பகிர்ந்து Cameo-வாக நடித்ததற்கு நன்றி என தனுஷ் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 2 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை மனு பாக்கரிடம், 'ஒருநாள் முழுக்க ஒரு விளையாட்டு வீரருடன் நேரம் செலவிட வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்?' என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு "எனக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை சொல்கிறேன். முதலில் ஜமைக்கா விளையாட்டு வீரர் உசைன் போல்ட். இந்திய விளையாட்டு வீரர்கள் என்றால் நிச்சயம் முதல் பெயர் சச்சின் டெண்டுல்கர் தான். அதன்பின் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடன் நேரம் செலவிட விரும்புவேன். இவர்கள் மூவரில் ஒவ்வொருவருடன் ஒரு மணி நேரம் செலவிட்டால் கூட வாழ்க்கையில் அது மறக்கவே முடியாத தருணமாக அமையும்" என பதிலளித்துள்ளார்.