ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, கடந்த 2ம் தேதி இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்துள்ளது இஸ்ரேல்.
தனது வளர்ப்பு நாயான Titoவை வாழ்நாள் முழுவதும் நன்றாக பராமரிக்க வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா. மேலும் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அவரது சகோதர, சகோதரிகள், வீட்டில் பணிபுரிபவர்களுக்கு பிரித்து எழுதி வைத்துள்ளார். தனது நீண்டகால உதவியாளராக பணிபுரிந்த சுப்பையாவிற்கும் உயில் எழுதி வைத்துள்ளார் ரத்தன் டாடா.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், "மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் த.வெ.க.கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்; இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்; வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்; உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும்" என த.வெ.க. கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘GOOD BAD UGLY’ படத்தின் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்கிறார் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி. வாக்காளர் விழிப்புணர்வுக்காக தனது புகைப்படத்தைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.