அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் சென்றுவந்த பிரதமர் மோடி, தனது x தளத்தில், "ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று பேசினேன். இருநாடுகளுக்கு இடையிலான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தோம். ரஷ்யா - உக்ரைன் போர் பற்றிய எனது எண்ணம் மற்றும் சமீபத்திய எனது உக்ரைன் பயணம் குறித்து கலந்துரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கிறேன்" என கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்கான சிறப்பு வார்டை இன்று திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் சிறப்பு வார்டுகள் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், குரங்கம்மை நோய் பாதிப்பை கண்டறிவதற்கான RT-PCR கிட் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்களது யானை சின்னத்தை விஜய் தனது கட்சிக்கொடியில் பயன்படுத்த கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர்ந்து கொந்தளித்து வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள கட்சி கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் விரைவில் துவங்க உள்ள வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா அறிவித்துள்ளார்.
"ராயன் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தனுஷ் உங்களுக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் அறிவேன். ஆனால் இயக்குநராகவும் உங்கள் திறமையை வெளிப்படுத்தி விட்டீர்கள்" என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ராயன் திரைப்படத்தை பாராட்டி கூறியுள்ளார்.