இஸ்ரேல் - ஹெஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. தெற்கு லெபனானில் தரை வழி தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே, வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இதன் மூலம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி வரையில் லெபனானில் 1,615 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நேற்று தெற்கு லெபனானின் காம்பேட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 37 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இங்கு விமானப்படைக்குத் தேவையான 'சி-295' ரக போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களைத் தயாரிக்க உள்ளன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளனர். (அடுத்த 3 நாட்களுக்கு மொத்தம் 14,086 பேருந்துகளை இயக்க முடிவு)
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள 'அமரன்' திரைப்படம், வரும் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் மாஸாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலான ப்ரீ புக்கிங்கில் இப்படம் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர் தோல்வியால் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் அண்மையில் விலகிய நிலையில் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ODI மற்றும் T20 தொடரில், பாகிஸ்தான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.