.jpg?w=320&auto=format%2Ccompress&fit=max)
33- வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை 30) 4-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலில் சர்போஜித் சிங், மனு பாகெர் இணை, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். ஏற்கனவே தனிநபர் பிரிவில் மனு பாகெர் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று உள்ள நிலையில், இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இன்று (ஜூலை 30) விடுதலை செய்யப்பட்டனர்.
"செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளால் இந்தியாவில் வேலை இழப்பு ஏற்படாது" என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மக்களவையில் அவர் பேசியுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலச்சரிவால் வயநாட்டின் முண்டக்கை பகுதியில் மூன்று கிராமங்கள் மண்ணோடு புதைந்ததாக கூறப்படுகிறது. சூரல்மலைப் பகுதியில் வெள்ளத்தில் குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வயநாட்டுக்கு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், 1070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை அறிந்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக திரைத்துறையில் காலடியெடுத்து வைத்து, லைக்காவின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் கவின் நாயகனாக நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.