பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 6 தங்கப் பதக்கங்களை வென்ற ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. மேலும் பிரான்ஸ் இரண்டாம் இடத்திலும் சீனா மூன்றாம் இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையின் காரணமாக, வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில், நள்ளிரவு 1 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சூரல்மலை என்ற இடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, (என்.டி.ஏ) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, மே 5-ல் நடந்து, முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகின. இந்த தேர்வை மொத்தம், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 14 முதல் கவுன்சிலிங் துவங்கும் என (எம்.சி.சி) தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல், எம்.சி.சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, "திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டுடன் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம். நடிகர்கள் சார்ந்த பிரச்சினைகளும், தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சினைகளும் இருதரப்பும் கலந்து பேசி குழுக்கள் அமைத்துதான் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். தனுஷ் தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எந்தவொரு புகாரும் வராத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. படப்பிடிப்பை நிறுத்தப் போவதாக அவர்கள் கூறியிருப்பது பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய விஷயம். அதை எப்படி அவர்களாகவே முடிவெடுக்க முடியும் என்று தெரியவில்லை" என கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது 'டி-20' கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி இன்று பல்லேகெலேயில் நடக்கவுள்ள நிலையில், இந்த போட்டியிலும் இந்தியா வெற்றியை கைப்பற்றுமா? என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.