தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு 6 முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் ரூ.900 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீடு கிடைத்துள்ளது என்றும், சுமார் 4000-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன அலுவலகங்களுக்கு முதல்வர் சென்று பார்வையிட்டுள்ளார். அதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஃபார்முலா கார்பந்தயப் போட்டியில் சேத்தன் கொரடா என்ற மாற்றுத் திறனாளி இந்திய வீரர் செயற்கைக் கால்களுடன் பங்கேற்க உள்ளார். சென்னை டர்போ ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சேத்தன் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சென்னைவாசி ஆவார்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், பகல் 1.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், பகல் 1 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் 4-வது பாடலான 'மட்ட' இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப் பதக்கமும், இந்திய வீரர் மணிஷ்நர்வால் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு வீராங்கனை மோனா அகர்வால் வெண்கல பதக்கமும் வென்றனர். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலம் பதக்கம் வென்றார். ஒரே நாளில் 4 பதக்கங்களுடன் தரவரிசைப் பட்டியலில் 9- வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா.