

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. ஹாமண்டன் (Hammonton) விமான நிலையத்திற்கு அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து பயங்கரமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதில் ஒரு ஹெலிகாப்டர் வானில் சுழன்றவாறே கீழே விழுந்து சிதறியது.இந்த விபத்தின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஹெலிகாப்டர்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதத் தவறா என்பது குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.