தமிழக பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் இன்று கோவை மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் ஒரு குருக்ஷேத்ர போர். இந்த நாட்டில் இருக்கும் நல்லவர்கள் அனைவரும் பாஜக தலைமையில் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். தீய சக்திகள் அனைவரும் எதிர்ப்பக்கம் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கும் நமக்கும் பலப்பரீட்சை நடக்கப்போகிறது. இந்த குருக்ஷேத்ர போரை எதிர்கொள்ள நாம் அனைவரும் இன்று முதல் வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக, இந்த செயற்குழுக் கூட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பிரதமர் மோடி பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுவதைப் பற்றி ஆலோசிக்க இருக்கிறோம். தமிழகத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்த நன்மைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். அதேபோல், நாளை (சனிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக மகளிர் அணி சார்பில் கள்ளச்சாராய விற்பனையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நாளை மறுநாள் கவர்னரை சந்தித்து, கள்ளச்சாராய விஷயத்தில் அவரே நேரடியாகத் தலையிட்டு அதைத் தடுக்கவும், அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யவும் மனு கொடுக்க இருக்கிறோம்” என்று கூறினார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் சிடி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.