அடுத்து ரவுண்ட் சர்ச்சை ஆரம்பம் - வள்ளலார் குறித்து ஆளுநர் பேசியதற்கு வலுக்கும் எதிர்ப்புகள்

அடுத்து ரவுண்ட் சர்ச்சை ஆரம்பம் - வள்ளலார் குறித்து ஆளுநர் பேசியதற்கு வலுக்கும் எதிர்ப்புகள்
Published on

வடலூர் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு பேசியது, தி.மு.க மற்றும் கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பை பெற்றிருக்கிறது. ஆளுநர் மாளிகையை சனாதானக் கூடாராமாக மாற்றுகிறார்கள் என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். கருமச்சாலை உள்ளிட்ட இடங்களில் வழிபட்ட ஆளுநர், ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேசினார். அப்போது பேசும்போது, வள்ளலார் காட்டிய வழி என்பது சனாதான தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். திராவிட கழகத்தின் தலைவரான கி.வீரமணி, வள்ளலாரை சனாதனியாக காட்டி, வெள்ளை அணிந்த எம் வள்ளல் பெருமானை காவிச் சாய வேட்டி உடுத்திட்டவராகக் காட்டும் பச்சை திரிபுவாதம் செய்யும் ஆர்.என்.ரவியின் தில்லு முல்லுப் பிரசாரத்தை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட ஆளுநர் அறிந்து கொள்ளவில்லை என்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார். வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டிருப்பதாகவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை எம்.பியான வெங்கடேசன், வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள் மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வடலூர் வள்ளலார் சபை என்பது வைதீகத்திற்கு எதிரானது என்று நம்பப்படுகிறது. இங்கே சைவ மரபு பின்பற்றப்படவேண்டுமா என்பதும் தனி சர்ச்சையாகவே இருந்து வருகிறது. வள்ளலார் வழி என்பது உருவ வழிபாட்டுக்கு எதிரானது. வடலூர் சபையில் சிவலிங்க வழிபாடு கூடாது என்று ஒரு தரப்பும், வள்ளலார் ஒரு சிவத்தொண்டர் என்று இன்னொரு தரப்பும் பேசி வருகிறார்கள். சத்திய ஞான சபையில், பிற கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகம விதிகளை ஏற்பதில்லை.

1882-ம் ஆண்டு வள்ளலார் சத்திய ஞான சபைக்கென்று தனியாக வழிபாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன. இங்கே விளக்கும் மட்டும்தான் ஏற்றமுடியும். கற்பூரம் கூட ஏற்றக்கூடாது. அருட்பெரும் ஜோதி, தனி பெரும் கருணை என்பது மட்டும் ஒலிக்க வேண்டும். விபூதி அணிவது தொடர்கிறது. அத்துடன் வேதம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் என மதம் சார்ந்த வழிபாடுகள் எதுவும் இங்கே பின்பற்றப்படுவதில்லை.

ஆன்மீகம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. பசிப்பிணியை போக்கும் மருத்துவரே கடவுள். அவரை மதவாதியாக வெளிக்காட்டுவது தவறு. ஆன்மீகம்

என்பது வேறு. இந்துத்துவம் வேறு. ஆன்மீகம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றெல்லாம் விளக்கம் தரப்பட்டு வருகிறது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு என்று ஆளுநர் பேசியிருப்பதில் தவறில்லை என்கிறது இன்னொரு தரப்பு. ஆன்மீக அரசியல் என்றாலே சர்ச்சைதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com