நெய்வேலி பிரச்னை - கடலூரில் இன்று முழு அடைப்பு; களை கட்டுமா பா.ம.கவின் போராட்டம்?

நெய்வேலி பிரச்னை - கடலூரில் இன்று முழு அடைப்பு; களை கட்டுமா பா.ம.கவின் போராட்டம்?

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் கடலூர் மாவட்டத்தில் தொடர்கின்றன. உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விவசாயி களுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கையகப்படுத்தும் பணி ஆரம்பமானது. இந்நிலையில் பா.ம.க சார்பில் முழு கடையடைப்பு, பந்த் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் வடதமிழ்நாட்டில் பரபரப்பு நிலவுகிறது.

என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்.எல்.சி நிறுவனத்திற்கு ஊழியர்கைளை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.

கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராமங்களைச் சேர்ந்த நிலங்களை என்.எல்.சி நிறுவனம் கையகப்படுத்தும் நிலையில் வட தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான பா.ம.க போராட்டத்தில் இறங்கியிருக்கிறது. என்.எல்.சி. நிறுவனம், நெய்வேலியை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

தி.முக தரப்பில் பல மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் என்.எல்.சி நிறுவனத்துடன் பேசி, இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட இடங்களை மட்டும் கையகப்படுத்தும் பணி ஆரம்பமாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கடலூர் இழப்பீடு இதுவரை கிடைக்காத மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பிவிட்டிருக்கிறது.

நடுநிலை என்கிற பெயரில் தி.மு.கவினர் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் பேசி வந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருக்கிறார். வழக்கம்போல் பேருந்துகள் ஓடும். கடைகள் திறந்திருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

பேருந்து மீது தாக்குதல், எரிப்பு போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பேருந்துகளையும் பணிமனைக்கு கொண்டுவருமாறு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டள்ளது. மக்களுக்காக முன்னெடுக்கப்படும் ஒரு போராட்டம், அதே மக்களுக்கு தொல்லையாகிவிடக்கூடாது.

வட தமிழ்நாட்டில் போராட்டம் என்றாலே பதட்டமான சூழல் நிலவுவது வழக்கம். ஆகவே. பா.ம.கவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளை திறக்கும் அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com