என் ஐ ஏ பரிசோதனை… தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் மொத்தம் 60 இடங்களில் அதிகாரிகள் புலனாய்வு!

என் ஐ ஏ பரிசோதனை… தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் மொத்தம் 60 இடங்களில் அதிகாரிகள் புலனாய்வு!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கின் அடிப்படையில் நாடு முழுவதும் தற்போது என் ஐ ஏ (தேசிய புலனாய்வு முகமை நடத்தும் பரிசோதனை) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மொத்தம் 60 இடங்களில் தற்போது என் ஐ ஏ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சந்தேகப் பட்டியலில் உள்ள பல்வேறு நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் தீவிரவாத அமைப்புகளுடன் அவர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

பிறமாநிலங்களைப் பொருத்தவரை கேரளா மற்றும் கர்நாடகாவில் 20 இடங்களுக்கும் மேலாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் கொடுங்கையூரைத் தொடர்ந்து மணலி மற்றும் காசிமேடு பகுதிகளுக்கு என் ஐ ஏ பரிசோதனையில் ஈடுபட அதிகாரிகள் சென்றுள்ளதாகத் தகவல். இதில் காசிமேடு முகவரி போலியானது எனத் தெரிய வந்துள்ளது.

கார் குண்டு வெடிப்பு நடந்த போது அதையொட்டி அதனுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் நபர்களால் ரகசியக் கூட்டங்கள் எதுவும் தமிழகத்தில் நடத்தப்பட்டதா? அவர்கள் எங்கெல்லாம் பொருட்கள் வாங்கிச் சென்றார்கள்? என்பதைக் குறித்து தமிழக போலீஸார் முன்பே விசாரணை நடத்தி முடித்துள்ளனர் எனத் தகவல்.

தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வின் அடிப்படையில் இதுவரை சந்தேகத்திற்கிடமான வகையில் ஆதாரங்கள் சிக்கினவா? யார் மீதாவது இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு அது குறித்து ஒரு விரிவான பரிசோதனை விளக்கம் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என என் ஐ ஏ பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுவாக இந்தக் கார் குண்டு வெடிப்பை அடுத்து மத ரீதியாக மிகவும் தீவிரமாக இயங்குபவர்கள், பிரச்சாரத்தில் வெறி கொண்டு ஈடுபடுபவர்கள் கொள்கை ரீதியாக பல்வேறு நபர்களை ஒருங்கிணைக்கிறார்களா? எனும் அடிப்படையில் முன்பே சந்தேகப்பட்டியலில் இருப்பவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

இது போன்ற சோதனைகளில் சந்தேகப்படும் நபர்களது வீடுகளில் மதத் தீவிரவாதம் தொடர்பான சிடிக்கள், கொள்கை விளக்க பார்ம்லெட்டுகள், தீவிரவாதத்தை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் விதமான உரைகள் அடங்கிய காணொலிகள் போன்றவை பறிமுதல் செய்யப்படும். ஆனால், இப்போது நடைபெற்று வரும் பரிசோதனையில் இதுவரை அப்படி எதுவும் கிடைத்ததாகத் தகவல் இல்லை.

இது குறித்து இன்று மாலைக்குள் டெல்லியில் அமைந்திருக்கும் என் ஐ ஏ தலைமை அலுவலகத்தில் இருந்து முழுமையான அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com