முகமது ஷாரிக்கிடம் என்ஐஎ அதிகாரிகள் விசாரணை! மங்களூர் குக்கர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கு!

mangalore bomb blast
mangalore bomb blast

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த, 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தற்போது அதன் விசாரணை என்ஐஎ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முகமது ஷாரிக் விசாரணைக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு குணமாகியிருப்பதால், இன்று காலை முதல் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த, 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. குக்கர் குண்டு தயாரித்து எடுத்துச்சென்ற முகமது ஷாரிக் (24) படுகாயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் வீட்டில் சோதனை செய்து பேட்டரிகள், சல்பர், பாஸ்பரஸ், சர்கியூட், ஆணிகள், போல்ட் நட் உட்பட வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஷாரிக்குக்கு உதவிய மற்றும் தொடர்பில் இருந்ததாக, ஊட்டியில் ஒருவர், கர்நாடக மாநிலம் மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் என, நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியிருக்கிறது கர்நாடக போலீஸ். வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைத்த நிலையில், அவர்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷாரிக் பிடிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை, 9-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழு, அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால், அவரிடம் விசாரணை நடத்த முடியாத சூழல் நிலவியது. தற்போது முகமது ஷாரிக் குணமாகியிருப்பதால், போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

NIA
NIA

அதில் ஷாரிக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல், டைரி, ஆவணங்களை சோதனை செய்ததில், பயங்கரவாதிகளிடம் அவர் பயிற்சி பெற்று, 40 பேருக்கு மேல் ஷாரிக் பயிற்சி கொடுத்தது தெரிய வந்தது.

முகமது ஷாரிக், வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்தும் நிதியுதவி பெற்றிருக்கிறார். இந்தியாவில் சிலர் ‘பிட் காயின்’ மற்றும் ‘கரன்சி எக்ஸ்சேஞ்ச்’ மூலம் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்வது போல, பயங்கரவாத அமைப்புகள் ஒதுக்கிய டாலர், தினார் மற்றும் ரியால் கரன்சிகளை, இந்திய பணமாக பெற்றிருக்கிறார். எந்த வகையில் கரன்சி எக்ஸ்சேன்ஜ் செய்தார், அல்லது யார் ‘கரன்சி எக்ஸ்சேன்ஜ்’ செய்து இவருக்கு இந்திய பணம் கொடுத்தனர் என என்ஐஎ அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com