தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சென்னை மாநகரம் மட்டுமல்லாது மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 இடங்களிலும் சோதனைகள் தொடர்கின்றன. எதற்காக விசாரணை என்பது பற்றிய செய்திகள் இதுவரை கிடைக்கவில்லை.
இன்று காலை சென்னை மாநகரின் பல பகுதிகளில் குறிப்பாக ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்புகள் குறித்தும், சந்தேகத்துக்குரிய நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஏற்கனா என்.ஐ.ஏ வழக்கும் விசாரணையில் இருக்கிறது. சென்ற மாதம் விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்கில் கைதான 7 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனைகளுக்கும் கோவை கோட்டை மேடு வழக்கிற்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
சென்ற மாதம் சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து என்.ஐ.ஏ சோதனை நடத்தப்பட்டது. சென்னையின் இதயப் பகுதிகளான மண்ணடி, பாரிமுனை, முத்தியால்பேட்டை, குன்றத்தூர், போரூர், பம்மல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்தது. கேரளாவைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் விசாரணை நடத்தியதாக பின்னர் தெரிய வந்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடலோர பகுதியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பாக இரண்டு ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் கைது செய்யப்பட்டவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் சோதனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விசாரணையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவே என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் விசாரணையை நடத்தி வருவதாகவும், நாட்டின் பல பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்து அதன் மூலம் பெறப்படும் பணம் சென்னைக்கு கொண்டு
வரப்பட்டதாகவும் அவையெல்லாம் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது என்.ஐ.ஏ சோதனைகளின் நோக்கமாக இருக்கக்கூடும் என்கிறார்கள். இன்று மாலைக்குள் விரிவான விபரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.