காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது;
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இந்த பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி அளித்ததையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த இரவுக் காவலர் பணி காலி இடத்துக்கான தேர்வு பொதுப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப் படுவர். இதற்கான கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு, கடந்த ஜூலை 1-ம் தேதியில் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதும் ஆகியிருக்க வேண்டும்.
இந்த இரவுக் காவலர் பணிக்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கைப்பட எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் வரலாம்.
அந்த வகையில் இன்றுமுதல் வருகிற ஜனவரி 13-ம் தேதி வரை மாலை 5.45 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
-இவ்வாறு காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.