
நீலகிரியில் ஆதரவற்ற முதியவர்கள் தாயின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடலுக்கு நடனமாடியதை கண்டு மாவட்ட ஆட்சியர் அருணா கண்கலங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
அம்மா என்றால் யாருக்குதான் பிடிக்காது. இந்த உலகில் யாரையும் நம்மால் அன்னைக்கு நிகராக வைக்க இயலாது. அந்த அளவிற்கு நம்மை 10 மாதம் ஈன்று பெற்று கஷ்டப்பட்டு வளர்த்தவர் அவர். அப்படி தாயின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ”ஆசை பட்ட எல்லாத்தையும்.. காசு இருந்தா வாங்கலாம்.. அம்மாவ வாங்க முடியுமா” பாடலுக்கு ஆதரவற்ற முதியவர்கள் நடனமாடியது, மாவட்ட ஆட்சியர் உட்பட பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மேல்கூடலூரில் ஆதரவற்ற முதியவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அருணா, 100 வயதை கடந்த முதியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மா வாங்க முடியுமா" என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனம் ஆடினர்.
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தாலும், அம்மாவை போல் ஆகுமா என்ற வரிகள் ஒலிக்கும் போது, மாவட்ட ஆட்சியர் உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் சிந்தினார். நீண்ட நேரம் தேம்பிய மாவட்ட ஆட்சியரை, அங்கிருந்த முதியவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறி தேற்றினர்.
ஜில்லாவிற்கே கலெக்டர் ஆனாலும், அம்மாவிற்கு பிள்ளை தானே என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்விற்கு.