கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: அறிகுறிகள் & உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

 Nipah virus
Nipah virus
Published on

பூமியில் ஏராளமான வைரஸ்கள் உள்ளன. வைரஸ்கள் மிகவும் சிறிய கிருமிகள். அவை சிறிய எண்ணிக்கையில் மட்டுமே மனிதர்களை பாதிக்கும். அந்த வைரஸ்கள் நமது செல்களை பாதித்து நோயை உண்டாக்கும். வைரஸ்கள் ஏற்படுத்தக்கூடிய சில நோய்களில் ஜலதோஷம், காய்ச்சல், கோவிட்-19 மற்றும் எச்ஐவி ஆகியவை அடங்கும்.

அந்த வகையில் நிபா வைரஸ் வௌவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். நிபா வைரஸ் (NiV) தொற்று என்பது புதிதாக வளர்ந்து வரும் ஜூனோசிஸ் ஆகும், இது மனிதர்களுக்கு கடுமையான மூளையழற்சி மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது.

வௌவால் இனச்சேர்க்கை பருவத்திற்கு முன்னதாக, விலங்குகள் மூலம் பரவும் தொற்றுக்கான முக்கிய இடங்களாகக் கருதப்படும் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஐந்து மாவட்டங்களில், கேரள சுகாதாரத் துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாவட்டங்களில் வௌவால்கள் மற்றும் மனிதர்களிடம் நிபா வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் வௌவால் இனப்பெருக்கக் காலத்தில், வைரஸ் அதிகமாகப் பரவும் காலமாகக் கருதப்படுகிறது. நிபா வைரஸ் (NiV) ஒரு ஜூனோடிக் வைரஸ், அதாவது இது விலங்குகளிடமிருந்து மக்களுக்குப் பரவுகிறது. இது நேரடியாக மக்களிடையே அல்லது அசுத்தமான உணவு மூலமாகவும் பரவக்கூடும்.

நிபா வைரஸ் அறிகுறிகள்:

நிபா வைரஸ் லேசானது முதல் கடுமையானது வரை அறிகுறிகளை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட நபருக்கு, காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

அதுமட்டுமின்றி மயக்கம், நினைவில் மாற்றம், கோமா மற்றும் மூளையழற்சி உள்ளிட்ட கடுமையான நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நோய் முற்றும்போது, கடுமையான சுவாசப் பிரச்சினைகள், மூளைக்காய்ச்சல் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். நிபா வைரஸின் இறப்பு விகிதம் 40-75 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப அறிகுறிகள் தொற்றுக்குப் பிறகு 4 முதல் 14 நாட்களுக்கு நீடிக்கும். சில சந்தர்ப்பங்களில் இந்த தொற்று 45 நாட்கள் வரை நீடிக்கும்.

இதையும் படியுங்கள்:
Nipah Virus: வரலாறு! 
 Nipah virus

நிபா வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

தற்போது வரை ​​நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தேகிக்கப்படும் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

புதிய பழங்களை வாங்கும் போது கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு பண்ணையில் இருந்து பழங்களை வாங்கினால், வௌவால் கடித்ததற்கான அறிகுறிகள் பழங்களில் உள்ளதா என்பதை பார்த்த பின்னர் வாங்கவும்.

நோய்வாய்ப்பட்ட விலங்குகளைக் கையாளும் போது கையுறைகள் மற்றும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள். பன்றிகள் மற்றும் வௌவால்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். வௌவால்கள் கூடு கட்டும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும். குறிப்பாக அறிகுறிகள் உள்ள ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால், அதன் பின்னர் சோப்பு போட்டு உங்கள் கைகளைத் தவறாமல் கழுவவும்.

முதன் முதலாக கேரளாவில் கோழிக்கோடு, மல்லபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நிபா வைரஸ் கண்டறிப்பட்டது. இதுவரை நிபா வைரஸால் 22 பேர் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
'நிபா வைரஸ்' - தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க முடியுமா?
 Nipah virus

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com