

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதிமுகவில் இருந்து விலகி தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர். இது பற்றிய கேள்விகளை ஊடகவியலாளர்கள் நிர்மல் குமாரிடம் எழுப்பினார்கள்.
அப்போது பதில் அளித்த அவர், " எடப்பாடி பழனிச்சாமியை நீங்களே பார்த்திருப்பீர்கள், அதிமுக கட்சியின் செயல்பாடுகளையும் , அந்த கட்சித் தலைவரின் நடவடிக்கைகளை அனைவரும் அறிவோம். அது பற்றி எல்லாரும் கூறியிருப்பார்கள், இன்னும் ஒரு சில வருடங்களில் அதிமுக என்னும் கட்சி எப்படி இருக்கும் என்று. சில வருடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் போதும் , அவர் அதை வாங்கிக்கொண்டு தயங்காமல் பாஜகவில் அதிமுகவை இணைத்து விடுவார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அதனால் தான் , இன்று பல ஆண்டு காலம் 40, 50 ஆண்டுகாலம் அதிமுகவில் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தொண்டர்கள் இன்று கைவிடப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்தாலே, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அதிமுக தொண்டர்கள் 40, 50 ஆண்டுகாலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் , புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் நம்பி நீண்ட காலம் கட்சி பணியாற்றியவர்கள் . அந்தப் பாதையை மறந்து விட்டு, அதிமுகவிற்கு எப்போதும் எதிரி கட்சியான திமுக உடனே கூட்டணி வைக்க தயாரான எடப்பாடி பழனிச்சாமி, அடுத்து என்ன செய்வார்? என்று தெரியாமல், அவரை நம்பி எவ்வாறு அதிமுகவில் பயணம் செய்வது என்று கேட்கிறார்கள்.
அவருக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து விட்டால் போதும் கட்சியை உடனடியாக பாஜகவில் இணைப்பதற்கு தயங்கவே மாட்டார். இது மிகவும் வருத்தமான செயல். அதிமுகவில் உள்ள பெரிய மனிதர்கள் பலரும் குறுநில மன்னர்களாக செயல்பட்டு தங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கு மட்டும் அந்த கட்சியில் உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை மறந்து அம்மாவையும் மறந்து, நீண்ட காலம் கட்சிக்கு உழைத்த தொண்டர்களையும் மறந்து செயல்படுகின்றனர்.
அடுத்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் குறித்தும் நிர்மல் குமார் பேசியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.இதில் அதிமுகவை திமுக குறை சொல்வதும், திமுகவை அதிமுக குறை சொல்வதும் தான் மாற்றி மாற்றி இதுவரை நடந்து வந்துள்ளது. இது தவிர யாரும் அதில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆனால், முதல்வர் விஜய் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறார்.
8 ஆண்டு காலமாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் இந்த இடத்தில் ஒரு பெரிய அணையை கட்டி இருக்கலாம். ஒரு கல்லூரி கட்டுவதற்கு 9 வருடங்கள் சுற்றி சுற்றி இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. விரைவில் இதை முடிப்பதற்கு முதல்வரும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். சீக்கிரமாக கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடையும். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும், இதுதான் எங்களின் ஆசையும் என்று கூறியுள்ளார்.