
கடந்த 2014-ம் ஆண்டில் நாசாவும் - இஸ்ரோவும் நிசார் செயற்கைக்கோளை 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவுவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் பூமியை கண்காணித்து தகவல்களை சேகரிப்பதற்காக ‘நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கி உள்ளது.
நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன்அடிப்படையில் இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு சோதனைக்கு பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பலமுறை தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரிசெய்யப்பட்டு இன்று மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
சுமார் ரூ.1,805 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளில், நாசா ரூ.1,016 கோடியும், இஸ்ரோ ரூ.788 கோடியும் செலவிட்டுள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 800 கிலோ எடையும், 6 ஆயிரத்து 500 வாட்ஸ் சக்தி திறனும் கொண்டுள்ளது.
நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் என அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் எல் பேண்ட், எஸ் பேண்ட் ரேடார்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு ரேடார்கள் இந்த செயற்கைக்கோளில் செயல்படுவதால், பூமியில் சில அங்குலம் நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு, சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும், பூமியில் இயற்கை செயல்முறைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.
இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமியின், கிட்டத்தட்ட அனைத்து நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளின் இயக்கத்தை அளவிட்டு விரிவான படத்தை வழங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளையும் வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும். மேலும் நிசார் மிஷனின் வெற்றிகரமான ஏவப்படும் பட்சத்தில் இதுதான் டூயல் ரேடார் கொண்ட முதல் பூமி-கண்காணிப்பு செயற்கைக்கோளாக இருக்கும்.
நிசார் மிஷன் வழியாக கிடைக்கும் தரவுகளை பயன்படுத்தி பனிப்பாறைகள், பனிமலைகள், பனிமூடிய பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இது தவிர, மண்-ஈரப்பதம் மற்றும் நீர்வள கண்காணிப்பு பற்றிய ஆழமான புரிதலுக்கும் நிசார் மிஷனின் தரவுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
இந்நிலையில் செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன.