கைலாசாவுடன் ஒப்பந்தம். பதவியை இழந்த பராகுவே அமைச்சர்!

 Paraguayan minister.
Paraguayan minister.

நித்தியானந்தாவின் தனி நாடான கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்ததால்,  பராகுவே நாட்டின் வேளாண் துறை அமைச்சர் பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலையை பிறப்பிடமாகக் கொண்ட நித்தியானந்தா, பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவருக்கு இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் மத பீடங்கள் உள்ளது. இதுதவிர இந்தியாவில் பல மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் இவருக்கு உலகெங்கிலும் பல பக்தர்கள் உள்ளனர். இதற்கிடையே அவர் ஆட்கடத்தல், பண மோசடி உட்பட பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையிலும், திடீரென இந்தியாவை விட்டு வெளியேறி மாயமானார். 

கடந்த 2019ல் தலைமறைவான நித்தியானந்தா, அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தனக்கென கைலாசா என்று புது நாட்டையே உருவாக்கி விட்டதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். மேலும் அந்த நாட்டுக்கென தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி என வெளியிட்டு, இது முழுக்க முழுக்க ஒரு இந்து நாடு என்றும் குறிப்பிட்டார். கைலாசாவுக்கு இந்தியர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் குடியேறலாம் எனக் கூறி, அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறு வெப்சைட் ஒன்றையும் தொடங்கினார். 

ஆனால் இன்றுவரை கைலாசா நாடு எங்கு உள்ளதென்பது புதிராகவே உள்ளது. மறுபுறம் இவரின் சிஷ்யைகள் ஐநா சபைகா கூட்டத்தில் பங்கேற்பது போன்ற போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல கைலாசா நாட்டுடன் பல நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில்தான் கைலாசநாற்றுடன் பராகுவே நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ஒப்பந்தம் செய்ததால் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

அதாவது கடந்த அக்டோபர் மாதத்தில் தென் அமெரிக்கா நாடான பராகுவே நாட்டின் வேளாண்துறை அமைச்சர், கைலாசா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தொடர்பான செய்தி பராகுவே நாட்டு பத்திரிகையில் வெளியானதால், பெரும் விவாதத்தை கிளப்பியது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாதபோது எப்படி ஒரு அமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முடியும் என பல விமர்சனங்கள் எழுந்தது. 

அவரை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்ததால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக மாறி, அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இல்லாத ஒரு நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த அமைச்சர், பதவியை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com