நிதி ஆயோக் கூட்டம் நிறைவு - ஆளுக்கொரு காரணம் கூறி புறக்கணித்த முதல்வர்கள்!

நிதி ஆயோக் கூட்டம் நிறைவு - ஆளுக்கொரு காரணம் கூறி புறக்கணித்த முதல்வர்கள்!
Published on

2047 ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்னும் இலக்கை எட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒரே குழுவாக பணியாற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர், அடுத்து வரும் 25 ஆண்டுகளில் எட்ட வேண்டிய வளர்ச்சியை முடிவு செய்வதில் நிதிய ஆயோக் அமைப்பிற்கு முக்கியமான இடமுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது. ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வகர்ளும், யூனியன் பிரதேசத்திலிருந்து பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவற்கான சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றன.

11 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். பா.ஜ.க ஆளாத 10 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புதிய நாடாளுமன்றக் கூட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 20 பிரதான எதிரக்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்திருந்தார்கள். அதற்கு முதல்நாள் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணித்தார்கள்.

குறிப்பாக தமிழகம், கேரளா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க அரசுகள் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாநில முதல்வரும் ஒவ்வொரு காரணத்தை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழக முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

உடல்நலன் சரியில்லாத காரணத்தால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொள்ளவில்லை. ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஏற்கனவே சில நிகழ்ச்சிகளுக்கு வருவதாக ஒப்புக்கொண்டதால் டெல்லி கூட்டத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது என்கிறார்கள். கேரளா முதல்வர் பினராயி விஜயன் கலந்த கொள்ளாததற்கு இதுவரை காரணம் தெரியவில்லை.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான பணிகள் இருந்த காரணத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லியிலிருந்து முதல்வர் அரவிந்த கேஜ்ரிவாலும் பஞ்சாபிலிருந்து முதல்வர் பக்வந்த மன்னும் விருந்தினர்களாக ஹைதராபாத் வந்திருப்பதால் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.

பஞ்சாப் மாநில நலனில் கவனம் செலுத்தவில்லை என்பதால் புறக்கணிப்பதாக பஞ்சாப் முதல்வரும், டெல்லியில் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து புறக்கணிப்பதாக அரவிந்த கேஜ்ரிவாலும் அறிவித்திருந்தார்கள். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு ஆம் ஆத்மி தலைவர்கள் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஹைதராபாத் வந்திருப்பது அப்போதுதான் தெரிய வந்தது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசு சார்பாக பிரநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாக வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பீகார் முதல்வர், வேறு நேரத்தில் கூட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அதுவும் ஏற்கப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேச முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழகம், கர்நாடகா, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம், பீகார் என முக்கியமான மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் ஆளுக்கொரு காரணம் கூறி, கூட்டத்தை புறக்கணித்துவிட்டார்கள். புதிய நாடாளுமன்ற தொடக்க விழா பரபரப்பில் நிதி ஆயோக் கூட்டம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. 2023 ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் எந்த பரபரப்புமின்றி நடந்து முடிந்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com