பிரதமர் மோடியின் வெற்றி யாத்திரையை நிதிஷ்குமார் தடுத்து நிறுத்துவார்: தேஜஸ்வி யாதவ்!

பிரதமர் மோடியின் வெற்றி யாத்திரையை நிதிஷ்குமார் தடுத்து நிறுத்துவார்: தேஜஸ்வி யாதவ்!

“எனது தந்தை லாலு பிரசாத் யாதவ், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுபோல் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், நரேந்திர மோடியின் வெற்றி யாத்திரையை தடுத்து நிறுத்துவார்” என்று ராஷ்ட்ரீய ஜனதாதளகம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உறுதிபட தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தேஜஸ்வினி யாதவ் இவ்வாறு கூறியுள்ளார்.

பாட்னாவில், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் பேசுகையில் தேஜஸ்வினி யாதவ் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போதெல்லாம் ஹிந்து-முஸ்லிம் பிரிவினையை தூண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஹிந்து, முஸ்லிம் அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர் என்று குறிப்பிட்ட தேஜஸ்வினி யாதவ், சிலர் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என பேசிவருவதாகத் தெரிகிறது.

ஆனால், அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லாலு பிரசாத் மற்றும் நிதிஷ்குமார் இணைந்து இருக்கும்வரை யாரும் எங்களை அச்சுறுத்த முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடு ஒன்றும் தனிப்பட்ட ஒருவரின் சொத்து அல்ல என்றும் அவர் கூறினார்.

அன்று லாலு பிரசாத், எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினார். இன்று நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணி மோடியின் வெற்றி யாத்திரையை தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1990 இல் அப்போது பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத், ராமஜென்மபூமி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற, அத்வானி தலைமையிலான ரத யாத்திரையை சீதாமர்ஹியில் தடுத்து நிறுத்தினார். இதைத்தொடர்ந்து ரதயாத்திரை கடந்து சென்ற இடங்களில் எல்லாம் வகுப்பு மோதல் நடைபெற்றது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பெரும் சீரழிவை சந்திக்கும். எனவே அதை தடுக்கும் முயற்சியாக நிதிஷ்குமார் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வரலாறுகளை திருத்தியமைக்க முயற்சிக்கிறது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தேஜஸ்வினி குறிப்பிட்டார்.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்கள், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறினார்கள். விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்றார்கள் ஆனால், இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இதை பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் ஹிந்து-முஸ்லிம் பிரச்னை, கோவில்-மசூதி பிரச்னையை எழுப்புகிறார்கள் என்றார் தேஜ்வினி யாதவ்.

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் முயற்சியாக நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் உத்திகளை வகுக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com