2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதிஷ் குமார், "எனக்குப் பதவி மற்றும் அதிகாரத்தில் ஆசையில்லை. எனது பணி தேசத்தின் நலனுக்காகச் செயல்படுவது மட்டும்தான். எனக்கென்று தனியாக எதுவும் வேண்டாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ஒன்றே வேண்டும். அதன் பின்னர் எல்லோரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் பற்றி கூட்டாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம்" என்று கூறினார்.
நிதிஷ்குமாரின் இந்தப் பேச்சு குறித்து செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி கொடுத்த பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன், "நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை. அது தெரிந்துதான் நிதிஷ்குமார், ’நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன்’ என்று கூறி இருக்கிறார். பீஹாரில் ஆட்சியைப் பிடிக்க அவருக்கு உதவியாக இருந்தது பாஜகதான். எங்கள் கட்சி உதவியினாலேயே அவர் பீஹார் முதல்வரானார். ஆனால், இப்போது மாநிலத்தில் அவருடைய கட்சியின் செல்வாக்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சொந்த மாநிலத்திலேயே அவரது நிலைமை இப்படியிருக்க, பிரதமர் பதவிக்குக் கனவு காண்கிறார் நிதிஷ்குமார்" என்று கிண்டலாகக் கூறி விமர்சனம் செய்து இருக்கிறார் ஷானவாஸ் ஹுசைன்.