

உலகத்தை தற்போது மிகச் சிறியதாக மாற்றி இருக்கின்றன மென்பொருள்கள். தற்போது மனிதனும், மென்பொருளும் பிரிக்கமுடியாத படி பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு, இணையத் தேடுபொறி, மேகக் கணிமை (Cloud Computing), மற்றும் மென்பொருள் தயாரிப்புகளில் உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள் அமெரிக்க பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
புதிதாக கூகுள்(Google) கணக்கை தொடங்கும் பயனர்களுக்கு முக்கிய மாற்றம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிதாக கூகுள் கணக்கை தொடங்கும் பயனர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை இணைக்காவிட்டால் 15GB இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படாது என்றும், அவர்களுக்கு 5GB ஸ்டோரேஜ் வரம்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Gmail, Google Drive, Google Photos மற்றும் Google Map என கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த கூகுள் கணக்கு தேவைப்படுகிறது.
அவ்வாறு தொடங்கப்படும் கூகுள் கணக்குகளில் இதுவரை 15 ஜிபி வரை இலவச சேமிப்பகம்(storage) வழங்கப்பட்டு வந்தது. அதற்கு மேலாக ஸ்டோரேஜ் தேவைப்படுவோர் பணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது.
ஆப்பிள் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் கூகுள் இலவசமாக அதிக ஸ்டோரேஜ் வழங்குவதால் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல ஆண்டுகளாக, கூகிள் ஒவ்வொரு கூகிள் கணக்குடனும் 15GB இலவச ஸ்டோரேஜை வழங்கி வருகிறது.
இந்நிலையில் விரைவில் கூகுளில் இலவச ஸ்டோரேஜுகளுக்கு சில கட்டுப்பாடுகள் வரவுள்ளன. கூகுள் கணக்கை தொடங்கும் போது தங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிடாவிட்டால்/ இணைக்காவிட்டால் 15 ஜிபிக்கு பதிலாக 5 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூகுள் இதனை சோதனை முறையில் செய்து வருவதாக ‘ரெட்டிட்’ தளத்தில் பயனர்கள் கூறிய நிலையில் கூகுள் தற்போது இதனை உறுதிப்படுத்தி உள்ளது. புதிதாக தொடங்கும்போது மொபைல் எண்ணை இணைக்காதவர்களுக்கு 5 ஜிபியும், மொபைல் எண்ணை இணைத்தால் 15 ஜிபியும் வழங்கும் சோதனையை சில பகுதிகளில் சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
சொல்லப்போனால், கூகுள் நிறுவனம் தனது வாசகங்களைக்கூட ‘15GB’ என்பதிலிருந்து ‘15GB வரை’ (up to 15GB) என்று மாற்றத் தொடங்கியுள்ளது. மேலும், ஒரே ஒரு தொலைபேசி எண்ணை ஒரு கூகுள் கணக்குடன் மட்டுமே இணைக்க முடியும் என்பதையும் கூகுள் உறுதி செய்து வருகிறது.
பழைய கணக்குகளுக்கு இந்த புதிய விதி பொருந்தாது எனக்கூறப்படுகிறது. அதனால் ஏற்கனவே மொபைல் எண் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே முழுமையான இலவச சேவைகள் வழங்கப்படும் வாய்ப்பு என்றே சொல்லப்படுகிறது.
உண்மையில், போட்கள் (bots) மற்றும் போலி கணக்குகள் தங்களுக்கு வழங்கப்படும் இலவச சேமிப்பகத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவே Google இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் ஸ்பேம் கணக்குகளைக் குறைப்பதையும், ஒரு பயனருக்கு ஒரு கணக்கு என்ற கடுமையான கொள்கையை அமல்படுத்துவதையும் இந்த மாற்றம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாற்றம் தொடர்பாக கூகிள் நிறுவனம், இது பரவலாக வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை அல்லது இந்த மாற்றம் உலகளவில் சோதிக்கப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்தவில்லை.