அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

டந்த மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகிய இருவர் தங்களது மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இவர் தனது தீர்ப்பில், ’செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல’ என்றும், ’செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்’ என்றும் தீர்ப்பு வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா சார்பில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபன்னா மற்றும் சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘‘உடல் நலக்குறைவு காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தை அமலாக்கத்துறையின் கஷ்டடி காலமாகக் கருத வேண்டும்” என்று வாதிட்டதோடு, “இந்த வழக்கை அடுத்த வாரம் விரிவாக விசாரணை செய்ய வேண்டும்” எனவும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை விவகாரங்களில் அமலாக்கத்துறை கைது செய்யும்போது, நீதிமன்றக் காவல் என்பது முழுமையாக ஏற்புடையதல்ல. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உண்மையில் உடல்நலக் குறைவு ஏற்படவில்லை” என்று வாதிட்டதோடு, “செந்தில் பாலாஜிக்கு இதுவரை வழங்கப்பட்ட ஆடம்பர வசதிகளே போதும்” என்றும் முறையிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் கபில் சிபில், “அடுத்த விசாரணை வரை அமலாக்கத்துறை காவல் கேட்கக் கூடாது” என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுமட்டுமின்றி, அடுத்த விசாரணை வரை அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” எனவும் உத்தரவிட்டு உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com