"NO BAG DAY" மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க தெலுங்கானா அரசின் திட்டம்!

"NO BAG DAY" மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க தெலுங்கானா அரசின் திட்டம்!
Published on

கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோ பேக் டே அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள கல்வியாண்டுக்கான காலண்டில் எந்தெந்த தேதிகளில் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகப் பை எடுத்து வரவேண்டாம் என்பதை அடிக்கோடிட்டு தந்திருக்கிறது.

புத்தகப் பைகளை சுமந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதன் மூலமாக அவர்களது தோள், கழுத்து, முதுகு போன்ற இடங்களில் பாதிப்பு ஏற்படுவதாக பள்ளி கல்வித்துறைக்கு வந்த புகார்களை தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டிருந்தது. 2018ல் கர்நாடகாவில் நடைமுறையில் இருந்த நோ பேக் டே திட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் ஆலோசனைகள் தரப்பட்டன.

பின்னர் நோ பேக் டே திட்டம் மாதம் ஒரு முறை தெலுங்கானா பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வகுப்பு வாரியாக எத்தனை கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை மாணவர்கள் எடுத்து வரலாம் என்று வழிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒன்றரை கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை மட்டுமே எடுத்து வர முடியும்.

தெலுங்கானா அரசின் பள்ளி கல்வித்துறையின் அறிவிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக சனிக்கிழமைகளில் நடைபெறும் வகுப்புகளுக்கு நோ பேக் டே திட்டத்தையும் அறிவித்தது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நோ பேக் டே என்றும், அன்று யோகா, தியானம் உள்ளிட்ட மனவள பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்தைப் போல் தெலுங்கானாவிலும் கல்வியாண்டு இன்று முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 23, 2024 வரை திட்டமிடப்பட்டிருக்கும் கல்வியாண்டில் எந்தெந்த நாட்களில் நோ பேக் டே என்பதோடு, கூடவே அரை மணி நேரம் படிப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கியிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்தில் மாணவர்கள் அரை மணி நேரம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் கூடுதலாக பத்தாயிரம் நூலகங்கள் அமைப்பதற்கான பணிகளையும் மாநில அரசு தொடங்கியிருக்கிறது. நோ பேக் டே, லைப்ரரி நேரம் என்று அடுத்தடுதது ஆச்சர்யங்களை அறிமுகப்படுத்தும் தெலுங்கானா அரசு, நடப்பு கல்வியாண்டுக்கான ஒட்டுமொத்த நிகழ்வுகள் கொண்ட காலண்டரை தயார் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துவிட்டது.

இனி பள்ளிகள் திறப்பது, விடுமுறை குறித்த அறிவிப்புகளுக்காக பெற்றோர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. திட்டத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்துவதாகவும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்வியில் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டிலும் மாணவர்களின் புத்தகை பை சுமையை குறைக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com